search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " மாநில மனித உரிமை ஆணைய குழுவினர்"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியில் தீ வைக்கப்பட்டு சேதமான வாகனங்களை மாநில மனித உரிமை ஆணைய குழுவினர் பார்வையிட்டனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மோதல் உண்டானது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மனித உரிமை ஆணையம் சார்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து துப்பாக்கி சூடு நடந்த கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு சென்றார்கள். துப்பாக்கி சூடு நடந்த இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்பு காயப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்பு அவர்கள் திரேஸ்புரம் பகுதிக்கு சென்றனர்.



    இதையடுத்து துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு மற்றும் கலவரத்தில் தீவைக்கப்பட்டு சேதமான வாகனங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றி மட்டும் அல்லாமல் போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகள், சட்டவிரோதமாக அடைத்து வைத்த விவகாரம் மற்றும் இதர மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விசாரித்தனர்.

    தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆய்வுக்கு பின்னர் அவர்கள் இன்று மாலையே சென்னை திரும்புகின்றனர். #ThoothukudiShooting
    ×